திங்கள், 17 பிப்ரவரி, 2014

இளங்காரியின் வீதிவலம்...

இந்த இடுகையை நண்பர் சித்திரவீதிக்காரருக்கு பொங்கல் பரிசாக்குகிறேன்.

பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக ஆண்டு மலர் ஒன்றை 2014 தை திங்கள் பொங்கல் திருநாளில் வெளியிட வேண்டும் என்ற எண்ணங்களோடு நண்பர்களிடம் தகவல்களை கூறியிருந்தேன். கட்டுரைகள், கவிதைகள் என நண்பர்கள் உற்சாகத்துடன் தந்து கொண்டிருந்தனர். நண்பர் சித்திரவீதிக்காரர் கிராமத்து வாழ்வோடு இணைந்த காரி என்ற கோயில் காளை ஒன்றை பற்றிய சிறுகதையை அனுப்பியிருந்தார்.

இந்த இடுகையும் கூட ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை பற்றியது என்பதால்...



இந்த இடுகையும் கூட ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை பற்றியது என்பதால்... நண்பரின் காரி நினைவிற்கு வந்தது. காரி என்றால் கருமை நிறத்தை குறிக்கும். பொங்கல் மலரில் நண்பரின் சிறுகதை கதாநாயகனான காரி’யை அடையாளப்படுத்த நிழற்படத்தை கணினி வழியாக வலைதளங்களில் தேடிகொண்டிருந்தேன். காரி’க்கு ஒப்பான ஒரு நிழற்படம் கூட கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு வெண்மையோடு கருமை கலந்த ஒரு காளையின் படம் கிடைத்தது. அதனை அந்த சிறுகதைக்கு பயன்படுத்தி கொண்டேன். இருந்தும் சித்திரவீதிக்காரருக்கு அதில் அவ்வளவு நிறைவு ஏற்படவில்லை. மலரும் தை திங்கள் 1 அன்று குறித்த நேரத்தில் வெளியானது. அனைவரும் பொங்கல் மலரை படித்துவிட்டு பாரட்டும், உற்சாகமும் தந்தனர்.

இந்நிகழ்விற்கு பிறகு 2014 தை 13 அன்று திருப்பரங்குன்றத்தில் நண்பரும் கவிஞருமான சென்றாயன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து “ திருப்பரங்குன்றம் போற்றுவோம் “ என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தனர். அதில் தொன்மையான, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்,  ஜல்லிக்கட்டு காளை, ஆட்டுக்கிடாக்கள் மற்றும் சேவல்கள் போன்ற பண்பாடு சார்ந்த விளையாட்டு நிகழ்வின் அணிவகுப்பு ஆகியவற்றை இன்றைய இயந்திர, நாகரீக வாழ்வின் சாயல்களை பூசிக்கொண்டு வாழும் மக்களுக்கு நமது மண் சார்ந்த தொன்மையான பண்பாட்டு நிகழ்வுகளை அவர்களிடம் கொண்டு சென்றனர்.

அவைகளைப் பற்றிய பதிவுகளை இனிவரும் நாட்களில் காண்போம். தற்போது...   ” சித்திரவீதிக்காரரின் காரியின் வீதிவலம்... “

’திருப்பரங்குன்றம் போற்றுவோம்’ நிகழ்வில் நடைபெற்ற அணிவகுப்பில் நண்பர் சித்திரவீதிக்காரரின் சிறுகதையில் வரும் காரியை நேரில் கண்டேன். ஆம்...மெய்யாகவே பனிரெண்டு நாட்களுக்குள் காரி’க்கு ஒப்பான ஒரு கதாநாயகனை நேரில் நான் கண்டதும் மகிழ்ச்சி.... மகிழ்வு. காரியை பல கோணங்களில் நிழற்படம் எடுத்தேன். காரியும் பல கோணங்களில் எனக்கு காட்சி தந்தான். காரியிடம் இருந்த வேகமும், துள்ளலும், எழுச்சியையும் அவ்வளவு பக்கத்தில் இருந்து காண்பதற்கே அச்சமாக இருந்தது. காளையின் உரிமையாளர்களிடம் அனுமதி கேட்டு காளையோடு இணைந்து ஒரு நிழற்படம் எடுத்துக்கொண்டேன். ஒரு வீரனோடு இருக்கும் பொழுது எவ்வளவு தைரியமும் நம்பிக்கையும் இருக்குமோ அதை அந்த சில நொடிகளில் உணர்ந்தேன்.


இளங்காளையின் அழகிய முகம் எனக்கு, நண்பரின் சிறுகதையில் வரும் காரியை நினைவுபடுத்தியது. சிறுகதையில் வரும் காரியின் வாழ்வின் வரிகள் அனைத்தும் என் நினைவுகளில் அந்த சில நிமிடங்களில் வந்து சென்றது. ’ காரி ’ சிறுகதையின் கடைசி இரு வரிகளில் வரும் ’ இளங்காரி இன்னமும் கொஞ்ச நாட்களில் ஊரைக் காக்க கிளம்பப் போகிறது. கருப்பசாமியின் வீதிவலம் தொடங்கப் போகிறது ‘  என்ற வரியை பலரும் வரிகளாகவே படித்திருக்க முடியும். அதுதான் சாத்தியமும் கூட. ஆனால் எனக்கு மட்டும் அந்த கடைசி இரு வரிகள் காட்சிகளாகவே வந்து சென்றுள்ளது.

அந்த காட்சிகளை நீங்களும் கண்டு மகிழ சில நிழற்படங்களை எடுத்து இங்கு பதிவாக இணைத்துள்ளேன். காரியின் வீதிவலம் இதோ... 
  
நண்பரின் ‘காரி’ சிறுகதையை படிக்க... கீழ்கண்ட சொடுக்கிகளை அழுத்தி படிக்கவும்.

      







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக