மசூரி என்றாலே குளிர்ச்சி தான் நினைவுகளுக்கு
வருகிறது. பள்ளி காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய கோடைவாசத் தளங்களில் மசூரியைப் பற்றி
படித்ததுண்டு. பணி நியமித்தமாக உத்தரகாண்டில் இருந்த பொழுது, மசூரிக்கு சென்று வரும்
வாய்ப்பு கிட்டியது. சொல்லிலும், எழுத்திலும் விவரிக்க முடியாத பசுமை... குளிர்ச்சி.
ஊசியிலைக் காடுகள் ஒருபக்கமாகவே சாய்ந்திருந்தன...
மஞ்சுகளின் சுமை தாங்காமல்.
தூரத்தில் கீழே அழகான பச்சைப் புல்வெளிகளை காணமுடிந்தது... ஆனால் அங்கு சென்று விளையாடத்தான் முடியவில்லை...
கேத்திகள் எனப்படும் நெல் வயல்களின் தோற்றம்
நமக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்த சரிவான மலையில் ஏர்பூட்டி உழுது, நாற்று நட்டு, களை
பறித்து, நெல்மணிகளை எவ்வாறு அறுவடை செய்வார்கள் ? என்பதை நினைக்கும் போது இந்த மலைகளைப் போலவே, இந்த கேத்திகளும் ஆச்சரியத்தையும், அழகையும் அள்ளித் தந்தது.

வளைந்து செல்லும் சாலைகளில் செல்லும் பொழுது
எங்கும் முட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் முட்டிகொண்டோம் நானும் மஞ்சு பொதிகளும்.

வானங்களைத் தொட முடிந்ததோ இல்லையோ மேகங்களை,
மஞ்சு பொதிகளை தொட்டும்... தழுவியும் மகிழ முடிந்தது.
அவ்வளவு குளிர என்னவோ ? தாங்க முடியவில்லை
போலும்...
பார்க்கும் இடங்களெல்லாம் பச்சைப் போர்வையைப்
போர்த்தி கொண்டு மலைகள் காட்சி தந்தன.
திடீரென... தோள்களைத் தட்டியது யார் என்று
திருப்பி பார்க்கின்றேன்...... அங்கும் யாரும் இல்லை வெள்ளையாக ஒன்று மட்டும் நகர்ந்து
சென்று கொண்டிருந்தது.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக